
ஓர் அடி எடுத்து நடக்க ஆயிரம் கிடாய் கேட்டதாம் வெள்ளைக் கோயில் பக்கம் உள்ள அய்யன் கோயில் மாமுனி. அய்யனுக்குக் காவல் தெய்வம் வேண்டுமே? என் செய்வது? கொங்கு நாட்டுப் பெரியவர்கள் வல்லவர்கள் அல்லவா? அந்த மகாமுனியிடம் ‘ஆடிக்கு ஆயிரம் கிடாய் தருகிறோம்’ என்று வேண்டிட, அதுவும் ‘அடிக்கும் ஆடிக்கும்’ உள்ள வேறுபாட்டைப் பெரிதாக எண்ணாமல் ஒப்புக் கொண்டு வந்து விட்டதாம்.
இந்தக் கதையைக் கேட்டு, வியந்தபடியே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் என் பெற்றோர்களுடன் இரட்டைக் கிடாய் வெட்டி, இரட்டைப் பொங்கல் வைக்க அய்யன் கோயில் சென்றோம். மகாமுனிக்கு அருகில் சென்றதும் அங்கே பரந்து கிடந்த இரத்தச் சேற்றைப் பார்த்ததும் எனக்கு எப்படியோ ஆகிவிட்டது. அன்று ஏற்பட்ட வைராக்கியமான புலால் வெறுப்பு மறுப்பாகி, மாண்பாகி எனக்குத் தந்திருக்கின்ற நலத்துக்கும், வளத்துக்கும் அளவு கூற முடியாது.
உணவு ஒழுக்கமே உணர்வு – அறிவு – பண்பு ஆன்ம ஒழுக்கங்களுக்கு அடித்தளம். வீதியோரங்களில் – சாலையோரங்களில் எங்குப் பார்த்தாலும் மனிதனைக் குடிப்பதற்கும் அரக்கத்தனத்தை வளர்க்கும் புலால் தின்பதற்கும் தூண்டி விட்டு ‘வாவா’ என்றழைக்கும் கடைகள். உணர்வுகளைத் தூண்டும் கடுமையான காரம்; மனிதனை விலங்குத் தன்மைக்கு ஈர்க்கும் குடிவகைகள், காமக் கிளுகிளுப்பூட்டும் திரைப்படங்கள், போதையிலே மிதக்க வைக்கும் ‘வாயில் வைக்கும் கொள்ளிகள்’ அரசியல் பகல் கொள்ளையர்க்கும் ஆதிக்கச் செல்வர்களும் ஆனந்தம் தரும் கேளிக்கை விடுதிகள்; பேதையரும், போதையரும் உலாவரும் நட்சத்திர விடுதிகள்; மனித மனத்தை மாண்பை மெல்ல மெல்ல அரித்து அறவே அழிக்கும் ஆரவார ஆர்ப்பாட்ட வெறிக் கூத்துகள்; வணிகர்களை, முதலாளிகளை மேலும் மேலும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கத் தூண்டும் ஆடம்பரப் பொழுது போக்குக் கேளிக்கைகள்; அனைத்துக்கும் மூலம் உணவு ஒழுக்கம் இல்லாமையே!
