பாவலர். பேராசிரியர். முனைவர்.

கொங்கு நாட்டு வரலாற்றில் ஆறு அடுக்குப் பெயர் கொண்ட மக்கள்

முன்னரை:

விடுதலை வீரன், தீரன் சின்னமலை உரிமை முழக்கம் செய்த இந்த மண், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடியரசுக் கோட்பாட்டை வளர்த்த பெருமைக்குரிய மண்ணாகும். கொங்கு நாடு மேற்கே மங்களுரையும் கோலாரையும் கொண்டு பரந்துபட்ட நாடாகத் தென்னிந்திய அரசியலின் மையமாகத் திகழ்ந்த பெருமைக்குரியது. பல்லாண்டுகள் சமணம் சிறப்புடன் விளங்கியதும் இங்கேயே. அறவியல் உணர்வும் சமுதாயப் பொறுமையும் சிறந்த மண்ணாக இம்மண் இருந்தமையால் சாதிக் கலகங்கள் இங்குத் தோன்றவில்லை. அத்தகைய பண்பாட்டுச் சிறப்பும் உடன் பிறப்பு நேயமும் கொண்ட கொங்கு நாட்டு வேளாண்குடியில் பிறந்தவரே நமது போற்றுதலுக்குரிய தீரன் சின்னமலையவர்கள். அவர் பிறந்த வேளாண்குடியினர் இந்தியாவிலேயே எந்தக் குடி மக்களுக்கும் இல்லாத தனித்த பண்பாட்டுச் சிறப்புக் கொண்டவர்கள். அப்பண்பாட்டில் குறிக்கத்தக்க ஒன்று அவர்களின் ஆறு அடுக்குப் பெயர்ச் சிறப்பாகும். இச்சிறப்புச் செய்தியை இக்கட்டுரை  கல்வெட்டு ஆதாரங்களை கொண்டு சுருக்கமாக ஆய்ந்து கூறுகிறது.

கல்வெட்டில் கொங்கு வேளாளார்கள்:

கி.பி. முதலிரு நூற்றாண்டைச் சார்ந்த நடுகல் கல்வெட்டுக்களிலேயே கொங்கு வேளாளர்கள் தமது சிறப்புப் பெயரான கூட்டப் பெயருடன் குறிக்கப்படுகின்றனர் .பின்னர் கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர் கல்வெட்டுக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கொங்கு வேளாளர்கள் ஆறு அடுக்குப் பெயரால் குறிக்கப் பெறும் சிறப்புப் பெறுகின்றனர்.

வெளிநாட்டார் குறிப்பு:

‘தமிழர்கள் குடும்பப் பெயர்களையோ தந்தை வழிப் பெயர்களையோ பயன்படுத்துவதில்லை” (டாக்டர் விதாலி புர்ணிகா – பிறப்பு முதல் இறப்பு வரை ப:16) என்ற உருசியத் தமிழறிஞர் குறிப்பிட்டுள்ளார் அவர் கொங்கு வேளாளரின் தனித்தன்மையை அறிந்திருந்தால் அவ்வாறு  எழுதியிருக்க மாட்டார். இவ்வாறு உண்மை வரலாற்றை மானுடவியல் அடிப்படையில் அறியாமல் இன்றும் பலர் பிழையான செய்திகளை எழுதியும் பேசியும் வருகின்றனார். உண்மை வெளியே வருவதற்குள் பொய் ஆயிரம் வேடமிட்டுக் கொண்டு உலாவந்து மக்கள் உள்ளங்களைக் கவர்ந்து ஆட்சியில் அமர்ந்து விடுகிறது என்பது உண்மை என்பதை உண்மையான ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவார்கள்.

கொங்கு வேளாளன் ஆறு அடுக்குப் பெயர்கள்:

வெள்ளாளன் புல்லிகளில் கோவன் இருடனான (இருளனான) இராசராச நாராயண காமிண்டன்.(652/1922)

வெள்ளாளன் தேவனகளில் சிறியான் செயங்கொண்டசோழக் காமிண்டேனன் (பெருமாநல்லூர்)

வெள்ளாளன் பெரியகளில் நம்பி நம்பியான நல்லமங்கை பாகனேன் (முருங்கைத் தொழுவு)

வெள்ளாளன் செம்பரில் செல்வநாந கொங்காழ்வான் ……. காமிண்டன் (வெள்ளியங்காடு)

வெள்ளாளன் பயிரரில் பிள்ளான் சிறியன் (……… காமிண்டன்)23ஃ1923

வெள்ளாளன் நம்பால் காமிண்டன் நாட்டுக் காமிண்டன் (பெருந்தலையுர்)

வெள்ளாட்டி துழாயால் அதிசய சோழ அரைசனான மணிகைய ராயன் (240/1909)

மேற்காட்டிய ஒரு சில சான்றுகளைக் கொண்டு மானுடவியல் நோக்கிலும் மரபியல் நோக்கிலும் ஆய்ந்து பார்த்தால் கொங்கு வேளாளார்கள் ஆறு அடுக்குப் பெயார் முறையைப் பயன்படுத்திய பாங்கு புலப்படும்.

1. இனப்பெயர் வெள்ளாளன்
2. கூட்டப்பெயர் புல்லிகளில்(புல்லகூட்டம்)
3. தந்தையின் பெயர் கோவன்
4. தனது பெயர் இருடன் (இருளன்)
5. பதவிப் பெயர் காமிண்டன்
6. பட்டப் பெயர் இராசராச நாராயணன்

‘கவுண்டிக்கை” என்பது ஊரதிகாரம் செலுத்துவதைப் குறிக்கும் சொல்லாகும். இன்றும் கொங்கில் கிராமப் புறங்களில் இச் சொல் அதிகாரத்தைக் குறித்து வழங்குவதைக் காணலாம்

எனவே ஊர்க காமிண்டார்களாக இருந்தமையால் காமிண்டார் என்னும் பட்டம் பெற்றனார்.அப் பட்டம் பெற்ற இனத் தலைவன் வழிவந்தோர் யாவரும் அக்கூட்டப் பெயரையும் பட்டப் பெயரையும் இணைத்துக் கொண்டனர் இவ்வாறு தமது மரபை அடையாளம் காட்டும் வகையில் இனப் பெயர் ,கூட்டப் பெயருடன் பட்டப் பெயரையும் இணைத்துக் கொண்டு, அரசன் பதவியைப் பாராட்டித் தந்தை பெயரையும் இணைத்து ஆறு அடுக்காகப் பெயரிட்டுக் கொண்டனர்

இவ்வண்ணம் ஆறு அடுக்குப் பெயர் கொண்ட இனம் வேளாளர் வேறு எந்த இனமும் இல்லை என்பதையும் இப்பெயர் கொங்கு நாட்டு வேளாளர்க்கே உரியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மகளிரும் இவ்வாறு  ஆறு அடுக்குப் பெயரால் தம்மைக் குறித்துக் கொண்டதைக் காணும் போது இப்பழக்கம் நாயக்கர் ஆட்சியில் அதிகாரம் யாவும் அயலவார் கைக்குப் போனதால் கொங்கு வேளாளார் இவ்வாறு  தம்மை அழைத்துக் கொள்வதைக் கைவிட்டிருக்கவேண்டும் ஏனெனில் விசய நகர ஆட்சிக்காலம் தொடங்கிக் காணப்படும் கல்வெட்டுகளில் மேற்காட்டிய அடுக்குப் பெயர்கள் காணப்படுவதில்லை.

முடிவுரை:

வரலாறும் பண்பாடும் நாகரிகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. கூடி வாழ்தலும் உறவு முறை பேணலும் பண்பாட்டின் உயர்வைக் காட்டும். மனித நேயத்துடன் அனைத்து இனத்தவரையும் அணைத்துக் கொண்டு ஆள்கின்ற பாங்கு கொங்கு வேளாளன் தனிச் சிறப்பாகும். அச்சிறப்பினை அவர்களின் ஆறு அடுக்குப் பெயர் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. வேளாண்மைத் தொழிலே பண்பாட்டின் – நாகரிகத்தின்  செவிலித் தாய் எனவே உலகை ஊட்டி வளர்க்கும் அத்தொழிலைப் போற்றும் வண்ணம் தம்மை  வெள்ளான் என்றும்: தம் இன முதல்வனின் மரபினைப் போற்றும் நன்றி உணர்வுடன் கூட்டப் பெயரையும் குறித்ததுடன் நின்றிருந்தால் மிகச் சிறந்த பெருமை கிடைத்திருக்காது. தந்தையின் பெயருடன் தம் பெயரையும் இணைத்துக் கொண்டு தம்மை முழுமையான முகவரி யுள்ளவார்களாக அடையாளம் காட்டியவர்கள் கொங்கு வேளாளர்கள். எனவே மரபியல் மானுடவியல் பார்வையில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர்கள் திகழ்ந்திருந்த பாங்கு இதனால் புலப்படும்.

Leave a Reply