
முன்னுரை
பழகு தமிழில் பாட்டிசைத்து இலகுபுகழ் கொண்ட புதுமைப் பாவலன் பாரதி. அவன் “புதிய அறம்பாட வந்த அறிஞன்” எனப் போற்றுவார், பாவேந்தர். அப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியின் அறவியல் நோக்கினை, 1. இறையுணர்வும் சமயமும் 2. காந்தியம் 3.பொதுவுடைமை 4. பகுத்தறிவியக்கம் 5.வள்ளுவம் என்னும் ஐவகைப்பட்ட அறவியல் நெறிகளின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆய்வதே இக்கட்டுரையின் கருத்தாம். “அவருடைய (பாரதியின்) வளரும் மனம் படிப்படியாகப் பரிணாமம் அடைந்து கொண்டிருந்ததையும், சிந்தனை விரிவடைந்த போக்கினையும் அவருடைய நூல்களிலிருந்து எளிதில் கண்டு கொள்ளலாம்”1 என்ற கருத்து அவருடைய பாடல்கள்வழிக் காணும் அறவியல் நோக்கினுக்கும் பொருந்தும் என்பதனை இக்கட்டுரை காண முற்பட்டுள்ளது.
பாரதியின்அறவுணர்வு:

வறுமையிலும் அறம் போற்றுக2 அறம் மிக்க சிந்தையுடன் வாழ்க3 அறம் வளர்க மறம் மடிக4 நீதி தவறேல்5 தருமமே வெல்லும்6 அறமே பெரிதென அறிந்திடுக7 பாரில் அறமழை பெய்குவான்8 வையம் பயனுறப் பாட்டினில்அறம் காட்டெனுமோர் தெய்வம்9 என்பன போன்ற கருத்துக்கள் பாரதி கொண்டுள்ள அறவுணர்வின் ஆழத்தைக் காட்டும். “அறத்தான் வருவதே இன்பம்”10 என்னும் வள்ளுவத்தை அடியொற்றி “அறமொன்றே தரும் மெய்யின்பம் என்ற நல்லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்”11 என்று பாடுவதால் தமது படைப்புக்களின் ஆணிவேர் “அறம்” (வள்ளுவம்) என்பதைச் சுட்டுகின்றார்.
