தமிழ் வரிவடிவங்களின் வரலாறு
(முனைவர். கா. அரங்கசாமி, கோபி)
முன்னுரை:
“தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஏண்மை இறைமை அம்மை செம்மை”1
எனவரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது தமிழ். தமிழின் வரிவடிவ வரலாறு போன்ற வரலாறு உலகின் வேறு எம்மொழிக்கும் இல்லை. பல நூறு மொழிகளில் தமிழ்ச் சொற்கள் மற்றும் உறவுப் பெயர்கள் அப்படியே வழங்குவதை கள ஆய்வு காட்டியுள்ளது2. அத்தகைய தமிழ் மொழிக்கு மட்டுமே பட எழுத்து (சித்திரவெழுத்து) உருவஎழுத்து, குறியீட்டெழுத்து, கருத்துஎழுத்து, அசை எழுத்து, எண்ண எழுத்து, ஒலி எழுத்து, அகர எழுத்து, உணர்வெழுத்து, தன்மையெழுத்து, வடிவெழுத்து, முடிவெழுத்து, ஆய்வெழுத்து, இராசிஎழுத்து, வட்டெழுத்து, கிரந்த எழுத்து, நூற்றாண்டு தோறும் மாற்றம் பெற்ற சதுரஎழுத்து, பெரியார்எழுத்து, புதிய குறியீடுகள் பற்றிய அறிவியல் பார்வை என ஆய்விலும் கற்களிலும் உள்ள வடிவங்களைக் காணலாம். எனவே தமிழின் வரிவடிவங்கள் பற்றிச் சுருக்கமாக இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.
எழுத்துக்களின் மறைபொருள்:
பொறியாளர் பா.வே மாணிக்க நாயகர் அவர்கள் முதன்முதலில் தமிழ் வரி வடிவங்களின் மறைபொருள் பற்றிய நூலினை வரைந்தார். அதில் தமிழ் எழுத்துக்களின் வடிவத் தோற்றம் அவற்றின் மறைபொருள் யாவும் நூல் முழுமையும் நிறைந்திருக்க காணலாம்3
அதனையே ஐந்திறம் ஓம் என்னும் ஒலியே,
“நிறையொலி, நேரொலி, வெளியொலி, விண்மொழி
மறையொலி ஓம் என வகுத்தற்பாற்றே”4 என்றும்
“உள்ளுறும் ஒளியே உணர்நிலைத் திறத்தால்
“தெள்ளுறும் ஒளியாய் ஓசைத் திறமாய்
விள்ளுறும் சொற்பொருள் ஓங்கத் தெரிந்தே
தெள்ளுறும் மொழி நிலை கலை நிலையியலே”5 என்றும்
“கண்ணிமை நொடித் தலைக் கால மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் நுண்மதியுற்றே
கண்ணிமை கூட்டும் காலத்தியலால்
எண் தரு கலை பல இயல்விளக்கும்மே”6 என்றும்
கூறும் போது ஓம் என்னும் மூலமொழியின் ஓசையே பல வடிவங்கள் ஆயின என்றும் மந்திரப் பொருளாகிய மறைபொருள் அடிப்படையில் தமிழ் எழுத்துக்களின் தோற்றம் பற்றிக் கூறிடக் காணலாம். மேலும் வடிவம் பற்றி ஐந்திறம் எழுத்தியல் மொழி என்று பகுதியில் கீழ்கண்ட செய்திகளைக் கூறும்.
“வானியல் ஒலியே ஓசை மொழியாய்த்
தானியல் வடிவுறுங்குறியெழுத்தென்ப7 என்னும் பாடலில்
வடிவத்தை கூறி அது எப்படி அமையும் என்பதை,
“கண்ணுங்கருத்தும் ஒன்றுவ போன்றே
எண்ணும் எழுத்தும் இயல்பில் திகழும்”8 என்றும் கூறும்.
மேலும், “கோட்டுரு வாக்கம் குறைவற நோக்கி
நீட்டுரு கோட்டுரு நெடிதுரு நினைந்தே” என்றும்
“சித்திரக் குறியே சீர் செய் மாநெறி”
நீட்டலும் எழுதலும் வரைதலும் குறித்தலும்
நாட்டுறப் பொறித்தலும் கல்லிற் செதுக்கலும்
ஏட்டில் எழுதலும்”9 என வடிவ வகைகளை விளக்கக் காண்க.
மேலும் “எழுத்தே வரிவியல், ஒளியியல், ஒலியியல், வடிவியல், கலையியல், நேரியல், எழுத்தியல், சிற்பவியல், இசையியல்”10 என அனைத்துமாய்ச் செறிந்த வகையையும் வகுத்துரைக்கக் காண்க. இவ்வாறு மெய்யுணர் நிலைநின்று தமிழின் எழுத்து வடிவம்பற்றிக் கூறும் கருத்துடன் அறிவியல், தொல்லியல், ஆய்வியல் கல்வெட்டியல் வழிக் காணும் வரிவடிவங்களைப் பற்றி காண்போம்.
தொல்லியல்:
தமிழ் மொழியின் தோற்றக் காலம் மனிதனின் தோற்றக் காலம் போன்றது. தொல்லியல் சான்றுகள் வரலாற்று நோக்கில் அமைவதில்லை. எனவே வரலாற்றை தொல்லியல் வழிநின்று மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இன்றைய அறிவியல் இத்துறையில் நமக்குப் பேருதவி செய்கின்றது. காலம் கணிக்கவும், வடிவங்களை ஒப்பாய்வு செய்யவும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. ஆச்சு போர்டு பல்கலைக் கழக அருங்காட்சியகத்தில் உலகம் முழுதும் உள்ள பழமையான ஓவிய எழுத்துகளையெல்லாம் ஓரிடத்தில் தொகுத்துப் படியெடுத்து வைத்திருக்கும் காட்சியை காணலாம். அதில் உள்ள ஒருமைப்பாட்டையும் அவை தமிழ் ஓவிய எழுத்துடன் ஒத்துப் போவதையும் காணும் போது சில உண்மைகளை நாம் அறிய முடியும்.
நன்னூல், “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்”11
என்று கூறுவதை நோக்க தொன்று தொட்டு வருவன எழுத்துக்கள் என்பது புலப்படும்.
ஓவிய எழுத்துக்கள் :
ஓவிய எழுத்துக்களாகிய சித்திர எழுத்துக்கள்(படவெழுத்து) எப்படிக் குறியீட்டு எழுத்தாகி ஒலியசை எழுத்துக்குரிய வடிவங்கள் ஆயின என்பதைப்பின் இணைப்பில் உள்ள பட்டியல் காட்டும். அதில் மொகஞ்சதாரோ, அரப்பா எழுத்துக்களுடன் தமிழ் ஓவிய எழுத்துக்கள் கொண்ட உறவும் வெளிப்படும்12 முதலில் ஓவிய எழுத்துக்களின் தோற்றம் பற்றிக் காண்போம்.
ஓவியங்கள் மூலமாக தங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டான். தமிழகத்தில் மல்லப்பாடி —– கீழ்வாலை —- கோவை, மதுரை நீலகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் கண்டுபிடித்தனர் 13
“குகைகளின் சுவர்களில் ஓர் ஓவியத்தின் மீது மற்றொரு ஓவியம் வரையப்பட்டிருப்பது ஆய்விற்கு உரிய ஒன்றாகும். இது தொடர்ந்து இந்தக் குகைகளில் மனிதர்கள் புழங்கியதைக் காட்டுகிறது, மேலும் இந்தக் குகைப் பகுதிகளில் தேவையான விலங்குகள் அதிக அளவில் கிடைத்திருக்க வேண்டும். இந்தக் குகைகளில் வேட்டையாட விரும்பும் விலங்கின் உருவத்தை வரைந்து சென்றால் அந்த மிருகம் வேட்டையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் இங்கு ஒன்றின் மீது ஒன்றாக ஓவியங்களை வரைந்திருக்கலாம். இது தவிர இந்தக்குகை ஓவியங்கள் வரையும் பயிற்சித் தளமாகவும் இருந்திருக்கலாம் என்று கருத முடிகின்றது14
“எழுத்தறிவு மக்களிடையே எவ்வாறு வளர்ச்சிபெற்றிருத்தல் வேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கீழ்க் காணுமாறு வளர்ச்சி பெற்றிருக்கலாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர். 1. உருவ எழுத்துக்கள் (Pictograph) 2. சுருக்கெழுத்துக்கள் (Ideograph) 3. ஒலியெழுத்துக்கள்(Phonograph) என்ற முறையில் வளர்ச்சி பெற்றிருக்கலாம் எனக் கருதுகின்றனர்”15
உருவெழுத்து:
“உருவே உணர்வே ஒலியே தன்மையென
இருவகை எழுத்தும் ஈரிரண்டாகும்
காணப்பட்ட உருவம் எல்லாம்
மானக்காட்டும் வகைமை நாடி
வழுவில் ஓவியன் கைவினை போல
எழுதப்படுவது உருவெழுத்தாகும்”16
எனவரும் பாடல்களால் பழந்தமிழகத்தில் உருவஎழுத்து உணர்வு எழுத்து, ஒலியெழுத்து, தன்மை எழுத்து எனவரும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் இருபாற்பட்டு எட்டு வகையாக விளங்கிய பாங்கும் அதில் உருவ எழுத்து ஓவியன் கைவினைத் திறன் போன்றது என்பதும் பெறப்படும். இதனால் குழுக்களாக இருந்த பழங்குடி மக்கள் பலவகைப்பட்ட எழுத்துருக்களைப் பயன்படுத்திய பாங்கும் புலப்படும்.
உணர்வெழுத்து:
“கொண்டவோர் குறியால் கொண்டவதனை
உண்டென்று உணர்த்துவது உணர்வெழுத்தாகும்”17
என்னும் பாடல் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட குழுஉக்குறியால் மேற்கொண்ட பொருளை உண்டு எனக்காட்ட உணர்த்துக் குறியாக அமைந்த குறியினை உணர்வெழுத்து எனக் காண்க. ஆதிமனிதன் உணர்வுக்கே அடிமை எனவே உணர்வெழுத்து எனல் பொருத்தமே. உணர்வினைத் தூண்டி உணர்வினை உருவாக்கும் எழுத்து என்பதும் எண்ணத்தக்கது.
ஒலியெழுத்து:
“இசைப்படு புல்லின் எழா அல் போலச்
செவிப் புலனாவது ஒலியெழுத்தாகும்”18
என்னும் பாடல் ஒலியெழுத்து என்று கூறி எழுத்திற்கு ஒலி வடிவம் வரிவடிவம் இரண்டும் உண்டு என்பதையும் அது இசையெழுப்பும் பறவைகளின் ஒலிபோல செவிப் புலனைச் சென்று அடையும் என்றும் விளக்க காண்க. பறவைகள் பேசுவது போல மனிதன் இசையால் பேசிய பாங்கு புலப்படக் காண்க.
தன்மையெழுத்து:
“அவற்றொடு புணர்ந்த வகத்தெழு வளியின்
மிடற்றுப் பிறந்திசைப்பது தன்மை யெழுத்து”19
என்னும் பாடல் சிக்கலுக் குரியதாக அமைந்துள்ளது. மேலே கூறிய மூவகை எழுத்துக்கள் போல மாந்தன் அகத்தவத்தால் வளியைக் கொண்டு (வாசியோகம் செய்து) பிறக்கச் செய்வது தன்மையெழுத்து என்று கூறும்போது நமக்கு மந்திர எழுத்துக்களே நினைவுக்கு வரும். எனவே தன்னைப் பற்றிய உண்மைகளை அறிய மாந்தன் முற்பட்டபோது இவ்வெழுத்துக்கள் தோன்றின என்பது புலப்படும்.
வடிவெழுத்து:
“வடிவு பெயர் தன்மையுண் முடிவு நான்கா
நடைபெறு நாவலர் நாடிய வெழுத்தே”
இதனால், வடிவு, பெயர், தன்மை, முடிவு என நால்வகை எழுத்துக்கள் வழங்கின என்பது அறியப்படும். மேலும்,
“கட்புலனில்லாக் கடவுளைக் காட்டும்
சட்டகம் போலச் செவிப்புல வொலியை
உட் கொளற்கிடும் உருபாம் வடிவெழுத்தே”20
எனவரும் பாடலால் கண்ணில் காண வியலாக் கடவுள் போலச் செவிப்புல ஒலியால் கருத்தை உள்ளத்தில் உணர்த்துவது வடிவெழுத்து என்பது உணரப்படும் திருவள்ளுவர் கூட ‘அகரம்’ ‘ஆதிபகவன்’ போன்றது என்று கூறிடக் காண்க. எனவே ஆழ்ந்தகன்ற நுண்ணிய சிந்தனைகளைக் கொண்டது வடிவெழுத்து என்பது புலப்படும்.
முடிவெழுத்து:
“உருவமுடன் மும்மை யோடொன்றிய வியல்பை
மடுவவுவன் துணி முடிவெழுத்து”21
என்னும் பாடல் உருவம் மட்டும் போதாது மூன்று காலமும் கடந்து நின்று உள்ள மடுவுள் துணிந்து முடிவு காணத்தக்க சிந்தனைகளைத் தருவது முடிவெழுத்து என்று உணர்த்தக் காணலாம். இதனைத் திவாகர நிகண்டு
“பெயர் எழுத்து முடிவெழுத்து வடிவெழுத்துத் தன்மை
எழுத்தென எழுத்தின் பெயர் இயம்பினரே”22
என்று கூறும். இவ்வாறு அவ்வக்கால நோக்கிற்கேற்ப எழுத்து வடிவங்களும், அவற்றின் பெயர்களும் மாற்றம் பெற்றே வந்துள்ள பாங்கினையும் அறிக. இதனையே பிங்கலந்தை “வடிவு, பெயர், தன்மை, முடிவு நான்கெழுத்து”23 என்று கூறும்.
இராசி எழுத்து:
கணிய நூற்களில் இராசிச்சக்கரம் ‘அமைத்து எழுதும்’ முறையில் அமைந்த எழுத்துக்களை இராசி எழுத்து என்றனர்24 திருமந்திர மாலை 300 நூல் இத்தகைய எழுத்துக்களை விளக்கக் காண்க. பல மந்திர ஏடுகளிலும், திருமந்தரத்துள்ளும் இத்தகைய எழுத்துக்கள் பற்றிப் பேசக் காணலாம். பேசா எழுத்து, பேசும் எழுத்து என்றெல்லாம் குறிக்கவும் காண்க. எனவே மனிதன் அக ஆற்றலாகிய “ஓம்” ஆற்றலால் பண்டு தொட்டே இத்தகைய எழுத்துக்களைக் கொண்டு “ஓக” முறையை வளர்த்த பாங்கும் புலப்படும்.
நாள் எழுத்து:
கார்த்திகை முதலிய நாள் எழுத்தும், தோப முதலியன நால்வகை எழுத்தும், சாதி முதலியன தன்மை எழுத்தும், சித்திர காருடம் முதலிய முத்திறவெழுத்தும், பாகியல் முதலிய நால்வகை எழுத்தும், புதிதேள் முதலிய நாற்கதியெழுத்தும், தாது முதலிய ஒலியெழுத்தும், மாகமடையம் முதலிய சங்கேதவெழுத்தும், கலிமுதலியன சங்கேதவெழுத்தும், பார்ப்பான் வழக்காகிய 13 எழுத்தும் என்று இத்தொடக்கத்தனவும் கட்டுரை யெழுத்தும் வச்சிர முலிய வடிவெழுத்தும், மற்றும் பலவகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க்கேட்க”25 என்று யாப்பருங்கல விருத்தியுரை கூறக் காண்க. இங்கு எழுத்து என்பது எழுதப்பட்ட பொருளையும் குறிக்கக் காணலாம். எனவே பழங்காலத்தில் எழுத்து என்ற சொல் எழுத்தை மட்டும் (வரிவடிவத்தை மட்டும்) குறிக்க வில்லை என்பதும் பெறப்படும்.
ஆய்வெழுத்து:
இதன் பொருளைச் சரியாக இன்றுவரை எவரும் கூறவில்லை ‘ஆயம்’ எனக்கொண்டு வரிக்கணக்குப் போன்றது என்பர் சிலர்26 ஆனால் ஆய்வெழுத்து எனக்கொண்டு ஆழ்ந்த நுட்பமான குறியீட்டெழுத்து எனக் கொள்வது பொருத்தமாக அமையும்.
தமிழகத்தில் உருவ எழுத்துக்கள் (ஓவிய எழுத்துக்கள்):
“தமிழகத்தில் முதன்முதலாக இத்தகைய உருவ எழுத்துக்கள் ……. கீழ்வாலை என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பண்டைய ஓவியத்தில் காணப்படுகின்றன. இதில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. முதல் எழுத்து தென்னங்கீற்று போலவும், இரண்டாம் எழுத்து மத்தளம் போன்றும், மூன்றாம் எழுத்து சீப்பு போன்றும், நான்காம் எழுத்து மத்தளம் போன்றும், ஐந்தாம் எழுத்து நான்கு குறுக்குக் கால்களையுடைய சக்கரம் போன்றும் எழுதப்பட்டுள்ளன”.
“தமிழகத்தில் கறுப்பு சிவப்பு பானை ஓடுகள் பெரும்பாலும் பெருங்கற்காலப் பொருட்களோடேயே கிடைத்து வருகின்றன. இவற்றுள் உள்ள எழுத்துருவங்கள் பெருங்கற்கால மக்கள் எழுதியவை……….இதனை மொகஞ்சதாரோ அரப்பா உருவ எழுத்தோடு ஒப்பிட்ட அறிஞர்கள் இரண்டிலும் உள்ள ஒப்புமையைக் கண்டுள்ளனர்”.
“பண்டைத் தமிழ்க் கல்வெட்டுடன் சில உருவங்களும் வரையப்பெற்றுக் காணப்படுகின்றன”27 மேற்காட்டிய செய்திகளால் மொகஞ்சதாரோ அரப்பா எழுத்துக்களோடு தொடர்புடைய எழுத்துக்கள் பழந்தமிழ் நாட்டில் காணப்பட்டதாலும் ஈராசுப் பாதிரியார் சிந்து வெளி எழுத்துத் தமிழ்தொடர்பு கொண்டவை என்று கூறுவதாலும் தமிழ் வரிவடிவங்களின் தொன்மை புலப்படும்”
“சிந்து வெளியில் முந்து தமிழ்” என்னும் நூலில் கீழ்கண்ட 45 குறியீடுகளைக் கொண்டே சிந்து வெளி எழுத்துக்கள் அமைந்துள்ளன என்பர் அவையாவன,

போன்றவை திரும்ப வந்துள்ளன.
“கி.மு. 3000 தொடங்கி 2500 அளவிலான எகிப்திய புதைப் பொறிப்பு எனப்படும் எழுத்துக்களையும், கி.மு. 3100 அளவில் படஉருக்களாக இருந்து கி.மு.2600 அளவிற்குள் இடுகுறி ஆப்பெழுத்தாக மருவிய சுமேரிய எழுத்துக்களையும் விடச் சிந்து எழுத்துக்கள் அழகும் தெளிவும் உடையதாகும் என்பர்.
தமிழ் எழுத்துக்களின் காலக் கணிப்பு:
- பொதிகை எழுத்து கி.மு 1700 முதல் கி.மு 1500 வரை
- வேட்துவாரகை எழுத்து கி.மு 1500 முதல் கி.மு 1300 வரை
- கீழ்வாலை எழுத்து கி.மு 1500 முதல் கி.மு 800 வரை
- பெருமுக்கல் எழுத்து கி.மு 1000 முதல் கி.மு 700 வரை
- யாழ்பாணம் எழுத்து கி.மு 3000 முதல் கி.மு 600 வரை
இக்கால வரையறையை ஒப்பிட்டு ஆராய்ந்தால் தமிழகத்தில் மேற்கூறிய எழுத்து வடிவங்கள் வழக்கில் இருந்த போது இப்பகுதிகளில் சிந்து நாகரிகக் கூறுகளின் தன்மைகள் நிலவின என அறியலாம். சில வரலாற்றாசிரியர்கள் தொன்மைத் தமிழ் எழுத்துகளைப் “பிராமி” என்ற பெயரில் வேண்டுமென்றே பொய்யாகக் குறிப்பிட்டனர்”28 பிராமிக்கு மூலம் தமிழி என்பதை அறிந்தால் இச்சிக்கல் எழாது, என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காலக் கணக்குக் கூட அறிவியல் பார்வையுடன் அமையாமையால் பிற்பட்ட காலத்தையே கூறுகின்றனர். எனவே வானியல், அறிவியல் கொண்டு காலம் கணிக்கப்பட்டால் தமிழ் எழுத்துக்களின் தோற்றக் காலம் பல்லாயிரம் ஆண்டுகள் பின் நோக்கிச் செல்லும்.
தொல்காப்பியம் கூறும் எழுத்து வடிவங்கள்:
தொல்காப்பியத்தின் காலத்தை கி.மு 15,000 முதல் கி.மு 7 ஆம் நூற்றாண்டு வரை ஆய்வறிஞர்கள் கணித்துக் கூறுவர். முனைவர் இலக்குவனார் தமது முனைவர்பட்ட ஆய்வேட்டில் தொல்காப்பியம் கி.மு 700க்கு முற்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். அவ்வளவு பழமையான தொல்காப்பியம் தமக்கு முன்னரே தமிழின் ஒலி, வரி, வடிவங்கள் செப்பம் உடையவனவாக இருந்தமையைக் கூறும்.
“புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவுருவாகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும்
ஆயீரியல உயிர்த்தலாறே (தொல்-எழுத்து-17)என்றும்
“மெய்யின் இயக்கம் புள்ளியொடு நிலையல்”(தொல் எழுத்து 5)
“எகர ஒகரத்தியற்கையும் அற்றே” (தொல் எழுத்து 16)
“உட்பெறு புள்ளி உருவாகும்மே”(தொல் எழுத்து 14)
“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்“(தொல் எழுத்து 46)
எனக்காட்டிய நூற்பாக்களில் வரிவடிவம் பற்றிப் பேசுகின்றார். இதனால் தொல்காப்பியர் காலத்துக்குப் பல நூறு ஆண்டுகட்கு முன்னரே எழுத்துமொழி தோன்றிச் செப்பம் செய்யப்பட்டது அறியப்படும். வரிவடிவம் காலந்தோறும் எழுதுபொருளுக்கு ஏற்ப மாற்றம் பெற்றாலும் பெரிய மாற்றங்கள் பெரும்பாலும் நிகழவில்லை. மெய்யெழுத்துக்கள் புள்ளிபெறும் என்பதையும் எகர ஒகரக் குறிலும் புள்ளிபெறும் என்றும் தொல்காப்பியம் கூறக் காண்க. எகர ஒகரம் உள்ளே புள்ளிபெற்று உயிராக இயங்கக் காட்டும் திறமும் எண்ணத்தக்கது.
“கிரேக்க எழுத்துமுறை, ரோமன் எழுத்துமுறை, அரேபிய எழுத்துமுறை, சீன எழுத்துமுறை, எகிப்து நாட்டு எழுத்துமுறை, எத்தியோப்பிய எழுத்துமுறை, பினீசிய எழுத்துமுறை, அரமாய்க் எழுத்துமுறை, இந்திய எழுத்துமுறை எனப்பல உள்ளன”29 ஆனால் அவையாவும் சிந்துவெளி எழுத்துமுறையைச் சார்ந்து வளர்ந்ததை ஒப்பாய்வு காட்டும். சிந்து வெளி முந்து தமிழ் வடிவம் என்பது அண்மைக் கால ஆய்வுகளில் அறிய வரும் செய்தி. அதற்குத்தக்க சான்று தொல்காப்பியம். தொல்காப்பியக் காலத்திலேயே தமிழ் நாடக வழக்கு, உலக வழக்கு, சேரி வழக்கு எனப் பகுத்து ஆய்வு செய்யப்பட்டதும். தமிழ்ச்சொற்கள் நால்வகைப்பட்ட அமைப்பில் வழங்கப்பட்டதையும் அறியும் போது தமிழின் தொல்பழமை அறியவரும்.
மாத்திரைச் சிறப்பு :
உலகின் பழமைமிக்க இலக்கணமாகிய தொல்காப்பியம் எழுத்துக்கு ஒலியளவு, ஒலிக்கும் காலஅளவு பற்றி முப்பரிமாணத் தோற்றத்துடன் கூறக்காணும் போது அதன் செப்பம் புலப்படும். ஒலியின் அலகாகத் தொல்காப்பியம் இமைத்தல், நொடித்தல் என இரு அலகுகளைக்கூறும். இமைத்தல் என்பதில் அடுக்கு நிகழ்வினையும்(குசநஙரநnஉல) நொடித்தலில் ஒலியலகினையும் ஆற்றலையும் காட்டக் காணும் போது அவர்தம் ஆழ்ந்த நுட்பம் புலப்படும். அத்துடன் தொல்காப்பியம் முன்னோர் கூற்றாகக் கூறுவதால் அதன் தொல்பழமையும் உணரப்படும்.30
தமிழி எழுத்து:
சங்ககாலக் கல்வெட்டுக்களில் காணும் எழுத்துக்களை தமிழி என்பர்(சிலர் தமிழ் பிராமி – திராவிடி என்றும் குறிப்பர்). தமிழுக்கே உரிய வடிவத்தை தமிழி என்று கூறுவது தான் சரி. இன்றுள்ள பழமையான எழுத்து வடிவம் தமிழியே என்பதும் அதுகாலந்தோறும் மாற்றம் பெற்றதையும் அறிஞர்கள் பட்டியல் இட்டுக் காட்டியுள்ளனர். இன்றுள்ள வடிவங்களுக்கு வித்தாக உள்ளது தமிழியே.
கோல் எழுத்து :
ஓவிய எழுத்தில் இருந்து கல்லில் பொறிக்கக் கோடுகளாக வரைந்த குறியீடுகளைக் கோல் எழுத்து என்றும் குறிப்பர்.
கண்ணெழுத்து:
“கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன்
மண்ணுடை முடங்கல்” (சிலம்பு 26, 170 – 171)
“கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடம்” (சிலம்பு 26, 134 -136)
கண்ணெழுத்து எது என்பதில் முரண்கள் உள்ளன. கண்ணெழுத்தே பழந்தமிழ் எழுத்து என்றும், வட்டெழுத்து என்றும், முத்திரை எழுத்து என்றும் கூறுவர். ஆனால் கண்ணெழுத்து என்பதன் பொருளை ஆய்ந்தால் கண்போல நீள்வடிவமான முத்திரை எழுத்துக்களே என்பதையும், அவை வணிகர் வழக்கு என்பதையும் அறிய, அழுத்திச் செய்யப்படும் முத்திரை எழுத்துக்களே என்பதும் பெறப்படும்.
வட்டெழுத்து:
கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களே வட்டெழுத்து எனப்பட்டது என்றும் ஓலைகளில் எழுதும்போது கோடுகள் ஓலைகளைக் கிழிக்கும் என்பதால் வட்டமாக எழுதியதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். பாண்டிய நாட்டில் வட்டெழுத்துக்கள் கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுக்கள் காட்டும். இமயமலை அடிவாரத்தில் உள்ள கோபலேசுவரர் ஆலயத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டு (தமிழில்) உள்ளது.31 இவ்வாறு தமிழ் வட்டெழுத்து இந்தியா முழுவதும் பரவிப் பல்வேறு எழுத்து வடிவங்கள் தோன்றக் காரணமாயின தன்மையும் அறியப்படும்.
கிரந்த எழுத்து:
தமிழகத்தில் பல்லவர் ஆட்சி ஏற்பட்டதும் வடமொழி ஆதிக்க மொழியாயிற்று. கிரந்த எழுத்துக்கள் வழக்கில் வந்தன. இதனைப் பல்லவ கிரந்தம் என்றே அழைப்பர். கிரந்தம் என்ற சொல்லிற்கு நூல் என்பது பொருள். இதுவே பின்னர் எழுத்தையும் குறித்தது. தமிழ்க் கல்வெட்டுக்களில் வடமொழிப் பகுதியைக் குறிக்க இந்த எழுத்துக்களையே பயன்படுத்தினர். தமிழ்நாட்டில் ஆனைமலை, அழகர்மலை, திருமயம், குடுமியாமலை, தகடூர், பேரூர் போன்ற இடங்களில் உள்ள சோழர்காலக் கல்வெட்டுக்களில் இக்கிரந்த எழுத்துக்களைக் காணலாம்.
முதல் அச்சு எழுத்து:
தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் – தம்பிரான் வணக்கம் என்னும் நூல் 1578 அக்டோபர் 20-ஆம் நாள் கொல்லத்தில் அச்சிடப்பட்டது. (பின் இணைப்பு 2)32 அதில் கொல்லம் எழுத்து, மலபார் எழுத்து, கோவா எழுத்து என்பன போன்ற வேறு வேறு வகையான தமிழ் எழுத்துக்கள் அன்று வழக்கில் இருந்ததைக் குறிக்கக் காணலாம். இவ்வாறு அச்சில் கூடப் பலவகைப்பட்ட எழுத்துக்கள் பழக்கத்தில் இருந்ததை நாம் அறிய முடியும்.
வீரமாமுனிவர் செய்த மாற்றம்:
“எகரத்துக்கும், ஒகரத்துக்கும் உட்புள்ளியை நிக்கிக் கால் இட்டார். உயிர்மெய்களில் எகர ஒகரங்கட்கு ஒற்றைக் கொம்பு அமைத்தார்33 அவரே சதுர வடிவான எழுத்துக்களை அமைத்தார் என்றும் கூறுவர்.
பெரியார் செய்த சீர்திருத்தம்:
பகுத்தறிவுப் பகலவன் ஈரோட்டுப் பெரியார் தமிழ் எழுத்துக்கள் சீர்மை பெற வேண்டும் என்று கருதினார். அதன் விளைவாக உயிர்மெய்க்கு, மெய்யுடன் கால் சேர்த்து வழங்கும் முறையைக் கொண்டார் (காட்டு: ணா, றா என்பது போல மற்றும் னை, லை என்பது போல) இதனைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தியது மேலும் குறிகளில் ஒப்புமை வேண்டும் என்று கருத்து இன்றும் ஒலித்துக் கொண்டுள்ளதைக் காணலாம்.
முடிவுரை :
உலக மொழிகளில் 24-க்கும் மேற்பட்ட வரிவடிவம் கொண்ட ஒரே மொழி தமிழே. தமிழின் வரிவடிவம் காலத்துக்கேற்பவும் எழுது பொருளுக்கு ஏற்பவும் மாற்றம் பெற்றுள்ள செய்தியும் மேலே கூறப்பட்டது. உலகமொழிகளில் தமிழில் மட்டுமே ஓவிய எழுத்துக் காலம் முதல் இன்றைய கணிப்பொறிக் காலம் வரை தொடர்ந்து அழகுமிக்க எழுத்து வடிவங்கள் இருப்பதைக் காட்டும் சான்றுகள் உள்ளதையும் மேலே கண்டோம். உலக அளவில் பரந்தும் சிறந்த இலக்கணக் கட்டுப்பாடு கொண்ட தமிழ் வரிவடிவத்தில் தொடர்ந்த வரலாறு கொண்டு சிறந்து விளங்குவதை இங்குக் கண்டோம். உலகமொழிகள் பல இன்றும் வரிவடிவம் இல்லை என்பதையும் அறியும் போது நமது வரிவடிவ வரலாறு நமக்குப் பெருமை சேர்க்கும்.
சான்றெண் விளக்கம்:
- செம்மொழித் தமிழின் செல்வியல் தன்மைகள் ப.8
- செம்மொழித் தமிழின் செல்வியல் தன்மைகள் ப.35
- பா. வே. மாணிக்க நாயகர், தமிழ் எழுத்துக்களின் மழைபொருள் (ஆங்கில
நூல்)
- ஐந்திறம் ப.13
- ஐந்திறம் ப.85
- ஐந்திறம் ப.319
- ஐந்திறம் ப.207
- ஐந்திறம் ப.208
- ஐந்திறம் ப.237
- ஐந்திறம் ப.237
- நன்னூல் ப.57
- பின்இணைப்பு ப.1
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.57
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.75
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.199
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.200
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.200
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.200
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.200
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.201
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.201
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.201
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.201
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.202
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.202
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.203
- தொல்லியல் ஆய்வுத் தொகுதி ப.205, 206
- செம்மொழித் தமிழின் செவ்வியல் தன்மைகள் பக் 97, 98, 99
- தமிழ்மொழி வரலாறு (முனைவர் சக்திவேல்) ப.407
- மொழியும் தரமும் (முனைவர் கா. அரங்கசாமி + சொ. ஆல கணேசன்)
மாத்திரை தொகுதி 6 பார்க்க
- செம்மொழித் தமிழின் செவ்வியல் தன்மைகள் (முனைவர் கா. அரங்கசாமி
அணிந்துரை ப.5)
- பின் இணைப்பு 2
- தமிழ் மொழி வரலாறு (முனைவர் சக்திவேல்) ப. 428
