கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள்
(முனைவர் கா.அரங்கசாமி க.மு.மெய்.அறி.கோபி கலைக்கல்லூரி, கோபி)
முன்னுரை:
“கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்”என்று போற்றப்பெற்ற கொங்குநாட்டின் வரலாறு இன்னும் முழுமையான வடிவம் பெறவில்லை. தனக்கெனத் தனிவரலாறு படைத்த கொங்குநாட்டின் தனித்தன்மை வாய்ந்த வரலாற்றைப் பண்பாட்டை – நாகரிகத்தைக் கல் வெட்டுகளின் வழிச் சுருங்கக் காண்பதே இவ்வாய்வுரையின் நோக்கம்.
கல்வெட்டுக்களின் எண்ணிக்கையும் காலமும்:
காலக் கோட்படாமல் ஆய்வர்தம் கண்ணில் பட்டுப்படியெடுக்கப்பட்ட கொங்குக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 450 ஆகும்1. கி.மு.5 ஆம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முடிய வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் இங்குள2. தமிழி-தமிழ் பிராமிக்கல்வெட்டுக்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்பது கல்வெட்டுக்கள் இங்கு கண்டறியப்பட்டுள3. பதிற்றுப்பத்துப்பாடும் செல்வக்கடுங்கோ வாழியாதன் முதலான சேரர், சோழர், பாண்டியர் கல்வெட்டுக்களும் கொங்குச் சோழ பாண்டியர் கல்வெட்டுக்களும், விசய நகர மன்னர்கள்: உம்மத்தூர் உடையார்கள், ஒய்சளர்கள் ஆட்சிக் கல்வெட்டுக்களும் இங்குள. கோனேரின்மை கொண்டான் என்னும் பெயரில் 46 கல்வெட்டுக்களும் வீரராசேந்திரன் ஆட்சிக்கல்வெட்டுக்கள் 36ம், சுந்தரபாண்டியன் 35ம், வீரபாண்டியன் 32ம் விசயநகர- மதுரை நாயக்க மன்னர்கள் 33ம், உடையார்கள் 25ம் பொறித்துள்ளனர். வரலாற்றுப் புகழ் மிக்க கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்த பழமையான எழுத்து வடிவங்களும் சிறப்பாக குறிக்கத் தக்கனவாகும்.
எழுத்துப் பொறிக்கப் பயன்பட்ட பொருட்களும் மொழியும்:
கல், செம்பு, மட்பாண்டம், தந்தம், ஓலை, தோல் முதலானவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும், தமிழி- தமிழ் பிராமி – வட்டெழுத்து தமிழ்க் கல்வெட்டுக்களும், வடமொழி – பாலி, தெலுங்கு, கன்னடம் ஆங்கிலமொழிக் கல்வெட்டுக்களும்4 இங்குள.
தமிழி- தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள்:
தமிழக வரலாற்றில் இக்கல்வெட்டுகள் சீரிடம் பெறத்தக்கன. இவற்றால், தமிழ் எழுத்துக்களின் தொன்மை, சங்க இலக்கியம் வரலாற்றுச் சான்றுக்குரிய தன்மையுடையதாதல், பழந்தமிழிசையின் பழமைச் சிறப்பு – கொங்குநாட்டின் பழமையான வரலாறு பண்பாடுஇ நாகரிகம் முதலியன தெளிவு பெறுகின்றன. அவற்றுள் சில கல்வெட்டுக்களின் செய்திகளைக் கீழ்க் காண்போம்.
“அமணன் யாற்றூர் செங்காயன் உறை கோ ஆதன்
சேல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன்
இளங்கடுங்கோ இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்”
என்னும் ஆர்நாட்டார் மலைக் கல்வெட்டால், பதிற்றுப் பத்தில் 7,8,9 ஆம் பத்திற்குரிய செல்வக் கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, இளஞ்சேரலிரும்பொறை மூவரும் குறிக்கப்பெறுகின்றனர். இவ்வாறு சேரர்தம் மூன்றுதலைமுறையைக் குறிக்கும் இக்கல்வெட்டு கொங்கின் வரலாற்றில் தனியிடம் பெறத்தக்கதாகும். ஆவ்வாறே, இசை புணர்க்கும் முறை பற்றிக் கூறும் “எழுத்துப் புணருத்தான் மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்னும் அரச்சலூர்த் தமிழிசைக் கல்வெட்டும் குறிக்கத்தக்கது. மேலும், புகழியூர், வேலாயுதம்பாளையம், தாரமங்கலம் அருகிலுள்ள அம்மன் கோயில்பட்டி ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டுக்கள் கொங்குநாட்டின் வரலாற்றில் ஒளிசேர்க்கக் கூடியவைகள்.
கொங்கு நாடும் – பிரிவுகளும்:
மீகொங்கு – மழகொங்கு – வடகொங்கு – தென்கொங்கு என்று கொங்குநாட்டை நான்கு பிரிவுகளாகக் கல்வெட்டுக்கள் கூறும். பொதுவாகக் கொங்கு 24 நாடுகள் என்பர். ஆனால் எந்தவொரு கல்வெட்டிலும் 24 நாடுகளும் கூறப்பெறவில்லை. பாரியூர்க் கல்வெட்டு 20 நாடுகளின் பெயரைக் குறிக்கிறது. சிக்க தேவ உடையாரின் கல்வெட்டு ‘நான்கு திசை 56 தேசத்து எட்டு வகைப் பல்லவரும் பட்டக்காரரும் என்று குறிக்கிறது. பிறிதொரு கல்வெட்டு திராவிட தேசம் கிளங்கு நாடு என்று கூறுகிறது. கல்வெட்டுகளனைத்தையும் தொகுத்துப் பார்க்க 34 நாட்டுப் பெயர்கள் கிடைக்கின்றன. எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதெல்லாம் நாடுகளின் எண்ணிக்கையும் மாறி வந்துள்ளன என்பதை அறியலாம்.
கொங்கு நாட்டில் அவைகள்:
தமிழகத்தின் பிறபகுதிகளில் ‘அவை’களின் பணி பிற்காலத்தில் (நாயக்கராட்சிக்குச் சிறிது முன்னிருந்தது) குறைந்து மறைந்து விட்டது என்பர் ஆய்வாளர்கள். ஆனால் விசயநகர ஆட்சியிலும் கொங்கில் நாட்டு ஊர்ச் சபைகள் திறம்படத் தன்னுரிமையுடன் செயலாற்றியதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன.
பொங்கலூர்க்கா நாட்டவரோம் மாடம் நிறைந்த மணிமண்டபத்து நிறைவற நிறைந்து குறைவறக் கூடி வாட்டம் இன்றி கூட்டம் பெருகி ஒருமித்து இருந்தமுடிவு செய்தனர் என்பர். பூந்துறை நாட்டவர், “அழிபிழை அநியாயம் செய்தாரை வெட்டுதல் குத்துதல் செய்தால் அவனுக்குத் தலைவிலை யில்லையாக10’’ என்று உலகு போற்றும் ஒப்பற்ற முழவினை எடுத்தனர். மேலும் பூந்துறை நாட்டவை வெள்ளோட்டில், ஈரோட்டில், கொளாநல்லியில் கூடி நாட்டுப் பணி செய்தது11. கல்வெட்டிதழ் 1ல் பூந்துறை நாட்டவர் கொடுத்த மேல் ஓலைபற்றிய விளக்கம் உள்ளது. மேலும் பூவானிய நாட்டவர், ஏழுகரைத் திருவாய்ப்பபாடி நாட்டவர், குறுப்பு நாட்டவர், தென்கரை நாட்டவர், காங்கயநாட்டவர், வடபாரிசாரநாட்டவர். தட்டையூர் நாட்டவர், கூடிச் செய்த செயல்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன12.
கொங்கில் சதுர்வேதி மங்கலச் சபைகள் பற்றிய குறிப்புக்கள் மிகச் சிலவாக உள்ளதால் இங்கு அகரங்கள் அதிகமில்லை என்பதை அறியலாம். குன்னத்தூர் அன்னூர் போன்ற ஆறு இடங்களில் மட்டுமே இச்சபைகள் இருந்தமை குறிக்கப்பட்டுள்ளது13.
ஊர்ச்சபைகள் (ஊராட்சி மன்றங்கள் ) பற்றிக் கல்வெட்டுக்கள் பரவலாகப் பேசுகின்றன. “வெள்ளாள நூரோம்” என்று இருகல் வெட்டுக்கள் குறிக்கிறது14.
திருச்செங்கோட்டில் மட்டும், திருவேகாதசி திருவாதிரை – திருவோணம் துவாதசி கணப் பெருமக்கள் கூடி அன்னதானம் செய்துள்ளனர். 15
வணிகக் குழுவும் சங்கமும்
பாண்டிய சோழ நாடுகளைப் போல வணிக் குழுக்கள் செய்த கொடைகள் பற்றிய குறிப்புக்கள் இங்கு அதிகம் இல்லை. வணிகர்கள் தனித்தனியே செய்த கொடை பற்றியச் சில கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. கொங்கு நாட்டில் ஆறு இடங்களில் வணிகக் குழுக்கள் அமைப்பாக இருந்து அறப்பணி செய்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது16.
படையெடுப்பு போர்
பேரூர்க் கல்வெட்டுக்கள் இரண்டு மட்டுமே படையெடுப்புப் பற்றி விரிவாகக் கூறுகின்றன. “கரைவழி நாட்டுக் கடற்றூரில் படை அடைச்சு…. கொழுமத்திலே சுந்தரமான அனுத்திரப் பல்லவரையன் கணபதியை நாம் அகப்படுத்தி ராசராசபுரத்திலே படையுங்கொண்டு பகுகிறேனென்று” என்றும் மலைநாட்டை வெல்லப் பட்டீசுவரரை வணங்கிச் சென்று வெற்றியுடன் வந்தவன் மீண்டும் பட்டீசுரம் புகுந்து “தெண்டன் பண்ணி” கோவன்புத்தூரை எறிஞ்சி தெண்டன் பண்ணி என்றும் குறிக்கின்றன. குலோத்துங்க சோழதேவன் தன் மருமகனுக்காக மதுரை மீது படையெடுத்துச் செல்லும் போது புரோகிதனுக்கு “யாத்திரைத்தானம்” தந்ததையும் ஒரு கல்வெட்டுக் குறித்துள்ளது17. மூன்று கல்வெட்டுக்கள் மட்டுமே மகமதியர் படையால் கொங்கில் ஏற்பட்ட அழிவுகளைப் பற்றி பேசுகின்றன.
சாதிச்சிக்கல்கள் – உரிமைகள் – வரிசைகள் தமிழ் நாட்டின் பிற்பகுதிகளில் இடைக்காலத்தில் சாதிக் கொடுமையால் பெருங்கலகங்கள் ஏற்பட்டதைக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. வலங்கை இடங்கைச் சாதியர் சேர்ந்து பிராமணர்க்கு எதிராக வரிகொடா இயக்கம், ஒத்துழையாமைப் போர் நடத்தினர். அகரங்கள் கோயில்கள் எரிக்கப்பட்டன20. கொங்கில் இத்தகைய செய்திகள் ஏதும் இல்லை என்பது சிறப்பாகக் குறிக்கத் தக்க செய்தியாகும். இங்கு அகரங்கள் அகரப்பற்றுக்கள் மிகக் குறைவாகவும், வேளாளர்கள் பிறவினத்தாரை உறவினராக மதித்ததாலும், விரும்பியவர்கட்கு விரும்பிய வரிசைகள் வழங்கப்பட்டமையாலும் ஊராட்சியமைப்பில் அனைத்து மக்களும் பங்கு பற்றியதாலும் சாதிப்பூசல்கள் தோன்றவில்லை. “கொள்ளி கோடியொன்று, உண்பதும் தின்பதும் ஒன்று (இவைகளில் சமநிலை) கொள்வதும் கொடுப்பதும் பிரதியம்” (திருமணத்தில் மட்டும் கலப்பு இல்லை) என்று மதுக்கரைப் பட்டயம் கூறுவது குமுகாய ஒருமையுணர்வுக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும் 21.
கொங்குக் கல்வெட்டுக்களில் காணும் தனித்த பிறிதொரு சிறப்புச் செய்தி. பிராமணர்கள் கூட மன்னனது பண்டாரத்தில் பொன் வைத்துச் சில உரிமைகளைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். அவர்கள் பெற்ற வரிசைகளைப் பற்றிக் கல்வெட்டுக்கள் கீழ்வருமாறு கூறும்22. 1. மேலற்ற மந்துலாகமும் கீழேற்ற குதிரையும் பெறல். 2.தழைப்பிடித்தல் 3.சீனக்குடை 4.சேகண்டி கொட்டல் 5. மச்சுக்குச் சாந்து பூசல் 6. இரட்டைத் தலைகடை வைத்தல் 7. கோல்கட்டிக் கொளல் 8.அணியாரம் பூணல் பச்சசைப்படாம் போர்த்தல் 9. மக்கட்குப் பொற்காறை அணிதல் 10. கலியாணத்துக்குக் கட்டணம் கட்டி ஊர்தியில் ஊர்வலம் வரல் முதலியன. தேவரடியார் பெற்ற வரிசைகளாவன. 1.திருவந்திக்காப்பு எடுத்துப் பணியும் முறையும் செய்தல். 2.திருநீற்றுக்காப்பு திருக்கண்ணாமடை முதலிய பிரசாதம்பெறல், 3.கூத்துப் பெருமாள் உலாவில் முன்னரங்கு ஏறல் 4.இறைவன் தேர், பூங்கோயில் திருநடைக்காவனம் உள்ளிட்ட இடங்களில் ஏறல், 5.மார்கழித் திருவெம்பாவைக்கு அபிநயம் பிடித்தல், 6.கருவறைவரை செல்லல் 7.பரிவட்டம் பெறல் 8.திருவந்திக்காப்பால் வரும் வரிசை பெறல் முதலானவைகளாகும். கம்மாளர் பெற்ற வரிசைகளாவன. 1.நன்மை தீமைக்கு இரட்டைச் சங்கு 2.பேரிகை கொட்டல், 3. பாதரட்சை அணிதல் 4.வீடுகட்குச் சாந்து பூசல் 5.இரட்டை நிலை வீடுகட்டல் இடையர்கள் பெற்றவை23 1.வீட்டிற்கு இருபுறமும் வாசற்படி அமைத்தல் 2.வீட்டுக்குச் சாந்திடல் 3.நன்மைக்குச் சிவிகை ஏறல் 4.தீமைக்கு மேல் வளைவுள்ள பாடைகட்டல் அதன் மேல் பச்சைப்பட்டு, பூப்புலியூர்ப் பட்டுக்கட்டல் 5.நன்மை தீமைக்குப் பேரிகை கொட்டல் என்பன. பலவினத்தாரும் பலமொழியாரும் ஒன்றுக் கூடித்தானம் செய்த செய்தியும் இங்கு உண்டு. உள்கூட்டம், வன்னியவட்டம், கன்னடிகள், தெலுங்கர், ஆரியர், கள்ளர், வில்லிகள் ஆண்டுக்குப் பொன் 1, பணம் 1, தர வேண்டும் என்று முடிவு செய்தனர் 24.
ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் தொன்மையான கொடுமணல் நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களாய் கொங்கு மண்ணின் மைந்தர்களாய் விளங்கிய வேளாளர் செய்த திருப்பணிகள் பற்றிப் பேசப்படுகின்றன. பத்துக் கல்வெட்டுக்கள் கூட்டப் பெயர்களையும் குறிக்கின்றன. மற்றும் 15க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் ‘காமிண்டன்’ ‘கவுண்டன்’ என்னும் சொற்களைக் கொண்டுள. கொங்குச் சாகாடசிற்றன தகடூரில் வீரம் விளைத்து நடுகல்லாய் நின்று புகழ் மேம்பட்ட செய்தியும் குறிக்கத் தக்க செய்தியாகும் 25.
வரிகள் – அளவைகள் – காசுகள்:
கொங்குக் கல்வெட்டுக்களின் வழிக் கொங்கில் வழக்கில் இருந்த வரிகளைக் காணும்போது இன்றைய வரிக்கொடுமைகளையே நினைவில் நிறுத்தும். ஏறத்தாழ 89 வகையான வரிகளைக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன26. இசைக்கிடாய் சூளைத்திறை ஒட்டச்சு போன்றவை கொங்குநாட்டில் மட்டும் உள்ளவை “கொங்கால்“ “திரிசூலக்கால்” “பிறவாநெறிக் காணியளவை“ “பரசேரிக்கால்” “பண்டாரக்கால்”, “குறுப்புநாழி” “பொன்னாடு நாழி” “ஒற்றைக்கால்” “ராசகேசரி” போன்ற முகத்தலளவைகளும் “மாத்திரை”, “கோல்”, போன்ற நிட்டலளவைகளும் (மன்னவன் செருப்புக் காலால் 18 அடி கொண்டது கோல்) “அச்சு” “வராகன்” “புள்ளிக்குகை”, “சிறீயக்கி பழஞ்சலாகை” “பழஞ்சலாகை” “புதுச்சலாகை” முதலிய காசுகளும் இங்கு வழக்கில் இருந்தன.
திருப்பணி கொடை:
கொங்குக் கல்வெட்டுக்களில் திருப்பணி செய்து எழுந்தருளச் செய்வது பற்றி 23 கல்வெட்டுக்களும், பிற அனைத்து வகைக் கொடைகளும் பற்றி (தேவதானம் திருவிடையாட்டம ; சர்வமானியம் – நிலம் – பொன் – பணம் தானம்) 145 கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. கொடைகட்கெல்லாம் பொதுவான கரணியம் அறநெஞ்சம்; பக்தியுணர்வு சமய நம்பிக்கை ஆகும். சிவபாத சேகர மன்னறை, பிறவாநெறிக்காணி போன்ற தொடர்கள் பக்தியுணர்வைக் காட்டும். அறக்காப்பில் இருந்த பேரார்வம் அறம் செய்தான் செய்தான் அறங்காத்தான் பாதம் திறம்பாமல் சென்னி மேல் வைத்து27 என்னும் கல்வெட்டுப் பாடலால் அறியலாம். இத்தகைய தானறி நிலையிலிருந்த அறவுணர்வு நாயக்கர்காலம் முதல் பேரளவுக்கு அச்சுறுத்தலுக்கும் ஆசைகாட்டலுக்கும் ஆட்பட்டதை அக்காலக் கல்வெட்டுக்களால் அறியலாம். காட்டாக, தானத்தைக் கெடுத்தவன் கங்கைக் கரையில் காராம்பசு, பிராமணர், மாதா, பதிவிரதை, சிசு, குரு முதலானோரைக் கொன்ற தோசத்தில் போவர். தண்டகாரன்யத்தில் செந்துவாப் பிறந்து அநேக நரகடைவர். பிசாசாயிருந்து அநேக நரகம் அனுபவிப்பர். தானம் காப்பவர் அநேக அயிசுவரிய சம்பன்னராகி தேவதத்துவத்தை அடைந்து சாயுட்சபதவியும் வேலாயுத சாமி வேண்டிய பாக்கியம் புத்திர மித்திர களத்திரங் கொடுத்து ரட்சிப்பார்29 போன்ற தொடர்களைக் காணலாம்.
சிலர்கொடைக்குரிய கரணியங்களாகக் கீழ்க் கண்டவற்றைக் குறித்துள்ளனர்30. 1.மகன் திருநாமஞ்சாத்த 2. பெருமாள் திருமேனிக்கும் கண்டியத்தேவர் வாளுக்கும் தோளுக்கும் நன்றாக 3.தன் மேக நோய் தீர்த்தமைக்காக 4.பிறந்த நாள் நினைவாக 5. தன்மகள் நினைவாக 6. தர்மமாக 7. மனைவி நலம்பெற 8. தன் பெயரால் சந்தியும் தானமும் செய்ய 9. தனக்கும் தன் அய்யனுக்கும் நன்றாக. கோயிலில் விளக்கேற்றல் ஞான ஒளி பெறல் என்பர். நாற்பது கல்வெட்டுக்கள் விளக்குத் தானம் பற்றிக் குறிக்கின்றன. பிற பகுதிகளில் நந்தா விளக்குத் தானம் அதிகமாயிருக்க் கொங்கில் நந்தா விளக்குத் தானம் பற்றி ஆறுகல்வெட்டுக்களே31 குறிப்பிடுகின்றன. இங்கு கோயிலுக்கு விளக்கு எரிக்கச் சாவாமூவாப் பேராடு, பசு, எருமை கொடுத்த செய்திகளும் இல்லை. முப்பத்திரண்டு கல்வெட்டுக்கள் சந்தி விளக்குகளுக்குச் சிவப்பிராமணரிடமே காசு கொடுத்ததைக் குறிக்கின்றன. பட்டியாடும் பால் பசுவும் பெருகிய “ஆகெழு கொங்கில்” ஆடும் மாடும் பேரளவிற்குக் கோயிலுக்குத் தராமைக்குரிய முதன்மைக் கரணியம், இங்குக் கோயிலைச் சார்ந்த நிலையில் ஆடுமாடுகளைக் காணும் இடையர்கள் இல்லாமையே என்பதாகக் கருதலாம். மேலும் சோழ பாண்டிய நாடுகளில் தண்டனையாக விளக்கேற்றல் உண்டு. இங்கு அத்தகு செய்தி எங்கும் இல்லை.
வணிகப் பெருவழிகள்:
பண்டு தொட்டே மக்கள் நலன் நோக்கிப் பெரு வழிகளமைத்துக் காத்தனர் என்பதற்குக் கல்வெட்டுக்களில் சான்றுகள் பலவுள32. அதியமான் பெருவழி, கொங்குப் பெருவழி, சேரனை மேற் கொண்டான் பெருவழி, அயிரைப் பெருவழி (கொழுமம் வழியாகச் செல்வது) இராசகேசரிப் பெருவழி (கோவை சுண்டக்காமுத்தூர் வழியாகச் செல்வது) சோழப் பெருந்தடம் (கோபி வட்டம் கணக்கம்பாளையம் வழியாகச் செல்வது) போன்ற பெருவழிகள் சிறப்பிடம் பெற்றவையாகும். இவற்றுள் ஈற்றில் குறித்த இரு வழிகளும் வேற்று நாடுகட்குச் செல்லும் மலை வழிகளாகும்.
அறமும் நீதியும்
வெள்ளை வேட்டுவன், வெள்ளப் பெரிச்சி மூப்பன் பெரியணகவுண்டனை வெட்டிப் போட்டு மாடுகளைக் கொள்ளையிட மகன் முத்துக்கவுண்டன் அதிகாரிகளிடம் முறையிட யாரும் கண்டுகொள்ளவில்லை. மதுரை சென்று மன்னன் திருமலையிடம் முறையிடத்தண்டுடன் வந்து அவர்களை வெட்டப் போக இருவரும் ஆறுகிராமம் காணியாட்சி தருகிறோம் விட்டுவிடுக என வேண்ட ராசாக்கள் கோயிலில் அதிகாரம் முத்துக்கவுண்டனுக்கு மாற்றித்தரப்பட்டது. அச்செப்பேட்டில் ‘ஆத்துமணலும் ஆவிரம் பூவும் உள்ள மட்டும் முத்துக்கவுண்டனுக்குக் காணியாட்சி குடுத்தபடி33 என்று குறிப் பிட்டுள்ளனர். மற்றும், “வள்ளுவர் உரைத்த முப்பால் மொழிப்படியே அறிவையறிந்து அல்லவை கடிந்து நல்லவை நாட்டி” நீதி வழுவாமல் இருக்க என்று ஆணையிட்டுள்ளமையும்34 இவ்வூரில் இருந்தார் ஒருவராயினும் அளந்துவரக் கடவராக என்றும், அளப்பது ‘உலகுற உலர்த்திப் பதரளத் தூத்தி அளந்து இவர்கள் கையில் சாதனம் கொள்ளக் கடவோம்35. என்றும் கூறும் தொடர்களை நோக்க அறத்தில் மக்கள் கொண்டிருந்த உறுதி புலப்படும் தண்டனையிலும் மனிதப் பண்பு வேண்டும் என்பதைக் காட்டும் சாத்தம்பூர்க் கல்வெட்டுத் தொடர் (தலைவிலையில்லையாக) மேலே சுட்டப்பட்டது பொருள் கையகப்பட்டுதுவதிலும் கூட மனிதப் பண்பு போற்றப்பட்டதை, “மண்கலம் தந்த வெண்கலம் பறித்துக் கொள்வார்களாகவும்” என்ற தொடரால் உணரப்படும்.
“ நாடு வளம்படுத்துறையும் குடி ஓம்பி
ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து
கோவீற்றிருந்து குடிபுறம் காத்து
பெற்ற குழவிக்கு உற்ற நற்றாய் போல்”36
ஆட்சித் தலைமை விளங்க வேண்டும் எனக்கூறும் பிரமியம் கல்வெட்டுச் சிறப்புக்குரியதாகும்.
ஏரிகுளங்கள்:
கொங்கில் ஏரிகுளங்கள் வெட்டிப் பயன்கொண்டதைப் பல கல்வெட்டுக்கள் எடுத்துக் கூறும். ஈரோடு அருகில் தாழி ஏரி37 தென்னவன் பொறையன் அமைத்தான். விசயமங்கலம் ஏரி. சூரலுர் ஏரி, அவிநாசி ஏரி, வாலசமுத்திரம் பற்றியும் குளங்கள் அமைத்துப் பயிர்வளம் பெருக்கியது பற்றியும் எட்டுக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. குளத்தை ஏரியை உலாவிப் பார்த்துக் கண்காணிக்கும் முறையும், கண்காணிப்பவனுக்குத் தரும் ஊதியம் பற்றியும் 38 கூறப்பட்டுள்ளன.
குறிக்கத் தக்க சில தொடர்கள்:
கொங்குக் கல்வெட்டுக்களில் வரும் “திருவெழுத்திட்டுச் செல்லா நினாற திருநல்லியாண்டு” “குடமும் குச்சியும் கொண்டு கோயில் புகுவார்”. “ஆமையோடு நண்டுப்பாழி உளப்பட்ட நிலமும்”39 “மறு சென்மத்தும் ஏழெட்டுச் சமணரைக் கொன்ற பாவத்திலே போவான்”40 போன்ற தொடர்கள் வேறு எங்கும் காணப் பெறாதமை. சமணத் தீர்த்தங்கரரைக் குறிக்கும் “அணியாத அழயாகியார்”41 என்ற அழகுத் தொடரும் “பசவேசர் துணை”42 எனத் தொடங்கும் ஊராட்சி கோட்டை நடுகல்லால் வீரசைவப் பற்றுத் தொடரும் எண்ணத்தக்கவை. “தன்பலம் நூறாயிரத்தாட்டைக்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற”43 எனத் தொடங்கும் ரவிகோதை கல்வெட்டுத் தொடர் தனிச் சிறப்புடையதாம் மற்றும் “நன்மங்கலம் சிறக்க”44 என்ற நற்றமிழில் தொடங்கும் அறச்சாலையம்மன் கோயில் கல்வெட்டும் போற்றத்தக்கது.
முடிவுரை:
பொங்கு புகழ்மிக்க கொங்கு நாட்டில் கண்ட கல்வெட்டுக்களின் வழி ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட வரலாற்றுக் குறிப்புக்களையும், பிற்காலச் சோழர், பாண்டியர், பிற மன்னர்களின் ஆட்சி பற்றியும், கொங்கின் உட்பிரிவுகள் அவைகள் அளவைகள் காசுகள் வரிகள் பற்றியும் சாதிப் பூசலற்றுப் பண்பாடும் நாகரிகமும் போற்றி மக்கள் வாழ்ந்த பாங்கும் அறவுணர்வோடு ஆலயங்களைப் போற்றி அறக் கொடைகள் வழங்கிய சிறப்பும்; வேளாளர்தம் தாளாண்மையும், ஓரினமாய் மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்த சீறும்; அரசு அல்லவை கடிந்து நல்லவை நாட்டி நல்லாட்சி புரிந்த சீர்மையும், சமணம், வீரசைவம் பற்றிய சிறப்புக் குறிப்புஇ அயலவர் படையெடுப்பும் அதன் விளைவுகளும், பல்வேறு இனத்தார் பெற்ற உரிமையும் வரிசையும். பயிர்வளம் பெருகச் செய்த செயலோடு வணிகவளம் போற்றப் பெருவழிகள் அமைத்த தகவும் அனைத்து மக்களின் அறவுணர்வு மேம்பாடும் விளக்கம் பெற்றன.
குறிப்புக்கள்
- தென்னிந்தியக்கோயிற்சாசனங்கள் தொகுதி 1, 2, 3. 220 கல்வெட்டுக்கள்
தென்னிந்தியச் சாசனங்கள் தொகுதி 3, 4, 5, 7, 13 1980 கல்வெட்டுக்கள்
ஆய்வாளர் பதிவு அலுவலர்கள் தேனோலை கல்வெட்டிதழ் போன்ற
ஏடுகளின் வழியாக படியெடுத்தலையும் ஏறத்தாழ 150 கல்வெட்டுக்கள்
- Natana Kasinathan, Hero Stones In Tamil Nadu P.59
- பூமயிலை சீனிவேங்கடசாமி கொங்குநாட்டு வரலாறு “பிராமிக்
கல்வெட்டுக்கள்”
- ஆங்கிலக் கல்வெட்டு குன்னத்தூரில் உள்ளது.
- தெ.இ.கோ.சா.எண்.291
- தெ.இ.கோ.சா.எண்.203
- தெ.இ.கோ.சா.எண்.714
- ‘Computational Analysis of Tamil Inscription” –
கட்டுரை கல்வெட்டிதழ் 10 ப 4
- தெ.இ.கோ.சா.எண்.1095
- தேனோலை 10 1976; ப .15
- தெ.இ.கோ.சா.தொ.4 எண்கள். 415, 414, 246
- தெ.இ.கோ.சா.தொ.7 எண்கள் 23இ 26இ 30
தெ.இ.கோ.சா.தொ.3 எண்கள் 247, 270,272,323,328,1189
- தெ.இ.கோ.சா.தொ. எண்கள் 1245, 1238, 1236, 1174, 265
- தெ.இ.கோ.சா. 197, 229, 140ஃ1915
- தெ.இ.சா.தொ. 13, 232, 244, தொ 19, 219, 427
- தெ.இ.கோ.சா. 214, 1155 சேவூர்க்கல்வெட்டு
- தெ.இ.கோ.சா.716
- தெ.இ.கோ.சா.309,1095, தெ.இ.தொ.4.எ.259
- 216/1917, 92/1918, 59/1914
- 31/1937
- தேனோலை 1.ப.16
- கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்களில் காணப்பெறும் உரிமைகள் ஆய்வேடு
பக்.49.54.57
- தெ.இ.சா.தொ.5.எ. 283
- தெ.இ.கோ.சா.706
- தமிழ்க்கல்வெட்டுக்களில் அறவியல் கோட்பாடுகள் முனைவர்பட்ட
ஆய்வேடு பின்னனிணைப்பு
- தமிழ்க்கல்வெட்டுக்களில் அறவியல் கோட்பாடுகள் முனைவர் பட்ட
ஆய்வேடு பின்னிணைப்பு ப.8
- தமிழ் கல்வெட்டுக்களில் அறவியல் கோட்பாடுகள் முனைவர்பட்ட
ஆய்வேடு பின்னிணைப்பு ப.9
- பேரூர்க் கல்வெட்டு
- தெ.இ.கோ.சா.1187
- தெ.இ.சா.தொ.4. 413, தொ.7.30, தொ.13 261 தொ. 10 46 தெ.இ.கோ.சா.286, 713,
645/1905
- தெ.இ.சா.தொ.13, 242, தொ.19, 429 கடத்தூர், சேவூர், பேரூர்க் கல்வெட்டுக்கள்
- தகடூர், சுண்டக்காமுத்தூர், கணக்கம்பாளையம், கல்வெட்டுக்கள்
- தேனோலை ஏப்ரல் 1976
- தேனோலை பூந்துரை நாட்டர் மேல் ஓலை
- முருங்கைத் தொழுக் கல்வெட்டு
- 183/1920
- Damulica Vol.1, தெ.இ.கோ.சா.267, 336, 204, 301, 318, 294, 266, 283, 720, 206,
304/1909
- தேனோலை 10. 1976 ப 17
- தெ.இ.கோ.சா.1095
- தெ.இ.கோ.சா. 322
- விசயமங்கலம் கல்வெட்டு
- தேனோலை 10, ப.28
- தெ.இ.சா.தொ.4.416
- தேனோலை 10.ப.9 (குறுக்க விளக்கம்: தெ.இ.கோ.சா. தென்னிந்திய
கோயில் சாசனங்கள் தொ.இ.சா. தென்னிந்தியச் சாசனங்கள்)
