
வாழ்வியல் – உண்மைப் புதினம்
“நிதுக்காரய்யன்” கற்பனைக் கதையன்று. கொங்கு மக்களின் மூன்று தலைமுறைப் போராட்டம். மாற்றம் மானுடத்தின் அடிப்படை என்றாலும் மாற்றம் வீழ்ச்சிக்கு வித்திடக்கூடாது. கொங்கு மக்களுக்குரிய பண்பாடு நாகரிகம் பழக்கவழக்கங்கள் தனித்தன்மை கொண்டவை. இன்றைய போலிக்கல்வியால் – புரட்டு அரசியலால் – தரம் தாழ்ந்த திரைக்காட்சிகளால் – திருட்டு நகர ஆதிக்கத்தால் நாட்டுப்புறப் பண்பாடு பன்மடங்கு சிதைந்து வருகின்றது. இதுவே இக்கதையின் கரு.
“நிதுக்காரய்யன்” நான் அன்றைய விடுதலை மிக்க சிறுவனாகச் சிற்றூரில் விளையாடிக் கொண்டிருந்த போது மனத்தில் தடம் பதித்த மாமனிதர். ஏகாலி பழனி நூற்றாண்டு விழாக் கொண்டாட உள்ளவர். யாவும் நடந்தவையே. நான் வெட்டியும் ஒட்டியும் சேர்த்துள்ளேன். பெயர்களையும் இடங்களையும் காலத்தையும் மாற்றியுள்ளேன். அறுபது ஆண்டுகள் சமுதாயத்தில் பார்த்த – கண்ட – கேட்ட செய்திகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கமே இதனை எழுதத் தூண்டியது.
கொங்கு வேளாளர்கள் வரலாற்றில் ஆறு அடுக்குப் பெயர் கொண்ட பெருமை பெற்றவர்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே கொடுமணலில் “நொய்யல்” நாகரிகம் படைத்தவர்கள். உலக வணிக மையத்தை நடத்தியவர்கள். அவர்களின் “வாசல் வளம்” கூறும் நூற்கள் பதினெட்டுக் கட்டுக் கண்ணிகள் பற்றியப் பரக்கப் பேசும். அனைவரையும் சாதி வேறுபாடு – பொருளியல் ஏற்றத்தாழ்வு பாராமல் தம் உடன்பிறப்பாக – மாமன் மைத்துனராகப் பார்க்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். ஆனால் பங்காளிப் பகைக்குப் பெயர் போனவர்கள். சிறுசிறு பகைகூடக் கொலைபழியில் முடியும்.
ஊரைக் கொடுப்பதற்கென்றே ஊருக்கு இருவர் இருப்பர். இன்று இவர்கள் பல்கிப் பெருகி அனைத்திலும் ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றனர். பெண்கள் உணவியல் படி அகமுகச் சிந்தனையும் உள்ள வலிமையும் உடைமையுணர்வும் தன்மதிப்பும் மிக்கவர்கள். கொங்கு வேளாண் மகளிர் மேற்கூறிய பண்புகளுடன் குடிமானம் – உழைப்பு – விருந்தேற்றல் முதலானவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள். எனவே பெண்களே வாழ்க்கையின் ஆணிவேர். ஆயினும் அந்த ஆணி வேரில் பட்ட நோயாகப் பிடிவாதம் பொருள் வேட்கை என்பன தோன்றித் துன்பச் சுமையாக வாழ்க்கையைச்சுமக்க வைக்கின்றன. மகளிரில் இன்றும் பலர் தெய்வீகத் தியாகச் செம்மல்களாக இலங்குவதையும் காணலாம். நமது நாட்டுக் காப்பியங்களில் கதைகளைப் பெண்களே நடத்துவது போல இக்கதையையும் பெண்களே நடத்துகின்றனர். மகளிர் இயக்க மனிதர் இயங்குகின்றனர்.
இக்கதையினைப் படித்ததும் பாராட்டி வெளியிடத் தூண்டியவர் தமிழின மார்க்சியப் பேரறிஞர் கோவை ஞானி அவர்கள் அவர் கொங்குச் சமுதாயம் பற்றிய சிறந்த ஆய்வுள்ளம் படைத்தவர். துலைமை சான்ற பொதுவுடைமைச் சிந்தனையாளர். இலக்கியத் திறனாய்வாளர். அவர் இக்கதையைப் பற்றிக்கூறும் கருத்துக்களை நீங்களே படியுங்கள். அவர்தம் கருத்துக்கள் இக்கதைக்கு நல் விளக்கமாக அமையும்.
[sdm-download id=”337″ fancy=”1″ new_window=”1″ color=”orange” button_text=”தரவிறக்கம்”]
good
nice
good nice
nice good