பாவலர். பேராசிரியர். முனைவர்.

‘விடுதலை வீரன்’ தீரன் சின்னமலை

'விடுதலை வீரன்' தீரன் சின்னமலை

தலைவர் முன்னுரை

தீரன் சின்னமலையினுடைய உண்மை வரலாறு இன்று பலவித வடிவங்களில் நூல்களாக இயற்றப்பட்டுள்ளது. வரலாற்று நூல்களாகவும், கவிதை நூல்களாகவும், நாடக வடிவங்களாகவும், இன்னும் பல வகையிலும் எழுதி வெளியிட்டு வருகின்றார்கள். நாடகங்களோ, புதினங்களோ கற்பனையில் புனையப்படும் போழுது எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். படிக்கின்றவர்களுடைய ரசனைக்குத் தக்கவாறு காட்சிகளை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் வரலாற்று நூலில் கற்பனைக்கிடமில்லை, உண்மை நிகழ்ச்சிகள் மறைக்கப்படக் கூடாது. யார் யாரையோ மனத் திருப்தி படுத்துவதற்காகக் கதையை மாற்றி அமைப்பது அந்த வரலாற்று நாயகர்களுக்கு நாம் செய்கின்ற துரோகம், அது மட்டுமல்ல இந்தத் தவறானப் பழக்கத்தால் எதிர்கால சந்ததியினருக்குப் பழைய வரலாற்று நிகழ்ச்சிகளின் உண்மை புரியாமல் போய்விடும். இப்படிப்பட்ட சில வரலாற்று நூல்களை அண்மையில் நான் படித்து வேதனைப்பட்டேன்.

தீரன் சின்னமலையினுடைய உண்மை கதையை முதன்முதலில் காலம் சென்ற பெரும் புலவர் பவானி குழந்தை அவர்கள் இயற்றினார்கள். அந்த நூல் அச்சாவதற்கு முன்பு கையெழுத்துப் படிவத்தை புலவர்கள் குழந்தை அவர்கள் எனது தந்தையிடம்  படித்துக் காட்டிய பொழுது உடனிருந்து கேட்டவன் நான். வசதியில்லாத அந்தக் காலத்தில் உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளைச் சேகரிப்பதற்காக அவர் அவ்வளவு சிரமப்பட்டார் என்பது எனக்குத் தெரியும், இன்னமும் சொல்லப் போனால் அவர் திரட்டிய உண்மை நிகர்ச்சிகளில் பலவற்றின் குறிப்புகளை, நான் தொலைத்துவிட்டேன் என்று வேதனைப்பட்டார். அவருக்கு வசதிகள் இருந்து இருந்தால் பல அக்கால ஆங்கில அதிகாரிகளின் குறிப்புகள், எழுத்துகள் இவைகளையும் சேர்த்திருக்க முடியும்.

தீரன் சின்னமலையினுடைய வரலாற்றை அதற்குப் பின்பு எனது நண்பர் திரு. கே. ஏ. மதியழகன் அவர்கள் சக்திகனல் அவர்கள், புலவர் இராசு அவர்கள், போன்றோர்கள் எழுதியுள்ளனர். முனைவர் அரங்கசாமி அவர்கள் இந்த நூலை எழுதுவதற்கு முன்பு எங்கள் பத்திரிகையான கொங்குவில் தொடர்ந்து எழுதி வந்தார். அவரும் இந்த நூலில் பல வரலாற்று நிகழ்ச்சிகளை எழுதாமல் விட்டு விட்டார். ஓரு வேலை பிறர் மனம் புண்படும் என்பதால், சில நிகழ்ச்சிகளை விட்டு இருக்கலாம்.

உதாரணத்திற்கு, தீரன் சின்னமலையை கொலை செய்ய வெள்ளைகாரர்களோடு பேரம் பேசிக் கையூட்டுப்பெற்ற பங்காளிகள் யார் என்பதை எழுதியிருக்க வேண்டும். தீரன் சின்னமலையினுடைய பரம்பரையைப் பற்றி எழுதும்போது அவன் பழையன் வழியில் வந்த பழையக் கோட்டை பட்டக்காரர் சந்ததி என்பது தவறு. உத்தமக்காமிண்டன், கரியான் சக்கரை என்பனது வாரிசுகள் என்று இருக்கவேண்டும். (பக்கம்-115) தத்து எடுக்கப்பட்டவர்கள் தீரன் சின்னமலையின் முன்னோர்கள்.

தீரன் சகோதரர்களைச் சென்னிமலைத் தேரில் கட்டி அவமான படுத்திய காரியப்பட்டி மாமனைப் மைசூர் போர் முடிந்து திரும்பியவுடன் வேஞ்சினம் தீர்க்க மாமன் தலையை வெட்டி புளியமரத்தில் தொங்கவிட்டு பகை முடித்தான். (பக்கம்-122). அரச்சலூர் அம்மன் சிலையின் முகத்தை உடைத்துச் சென்ற வெள்ளைக்காரன் படை சேதம் செய்த செய்தி அறிந்தவுடன் சீறிச் சினந்து வந்து அவர்களைப் பழி தீர்த்தான். இப்படிச் சிறு சிறு நிகழ்ச்சிகள் விடுபட்டாலும் முனைவர் அரங்கசாமி தனது எழுத்து ஆற்றலால் சிறப்புற நிறைவேற்றியுள்ளார். நூலில் பாதி நாடகமாகவும், பாதி வரலாறாகவும் இருப்பதை மாற்றி தனித்தனியாக விரிவுபடுத்தி எழுதியிருந்தால் நன்றாக இருக்கும். முனைவர் அரங்கசாமியின் இந்த முயற்சிக்கு எனது சிறந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை
15-09-1998
இப்படிக்கு
(கோவை செழியன்)

[sdm-download id=”374″ fancy=”1″ new_window=”1″ color=”orange” button_text=”தரவிறக்கம்”]

Leave a Reply